
உலக மகளிர் குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவின் நிது கங்காஸ் தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். 48 கிலோ எடைப்பிரிவில் மங்கோலியாவின் லுட்சாய்கானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார் நிது கங்காஸ். அவருக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு துறையினர், பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 22 வயதாகும் நிது கங்காஸ் இறுதிப் போட்டியில் மங்கோலிய வீராங்கனையை முதல் செட்டில் 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது. இரண்டாவது செட்டில் ஓரளவு தாக்குப் பிடித்த மங்கோலிய வீராங்கனை 3-2 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை இழந்தார்.
மகளிருக்கான குத்துச் சண்டை உலக சாம்பியன் தொடர் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் நிது கங்காஸ் மற்றும் மங்கோலியாவின் லுட்சாய் கான் ஆகியோர் தகுதி பெற்றனர். இறுதிப் போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனை ஆதிக்கம் செலுத்தி வந்தார். நுணுக்கமான நகர்வுகளால் லுட்சாய்கானை திணறடித்த நிது கங்காஸ், அதிரடியான பஞ்ச்சுகளால் பாயின்ட்டுகளை எடுத்தார். முதல் சுற்றில் அவர் 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றபோதே அவரது வெற்றி உறுதிசெய்யப்பட்டிருந்தது.