
கே.ஆர்.விஜயா பிறந்ததும் வளர்ந்ததும் சென்னையில். அவரது தந்தை ராமச்சந்திர நாயர் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களில் நடித்தவர். மூத்த மகள் தெய்வானையை நடிகையாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, 1963 இல் அதனை சாதித்தார். தெய்வானை கே.ஆர்.விஜயா என்ற பெயரில் கற்பகம் படத்தில் நாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். ஜெமினி கணேசன் நாயகனாக நடித்த கற்பகம் 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. 22 வருடங்கள் கழித்து, 1985 இல் அதே கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் தனது 200 வது படம் படிக்காத பண்ணையாரில் கே.ஆர்.விஜயா நடித்தார். அதுவும் ஹிட்டாகி அவருக்கு பேர் வாங்கித் தந்தது.
இந்த படிக்காத பண்ணையாருக்குப் பின்னால் ஒரு பெரிய கதையே உள்ளது. அதில் ஒரு கதையைத்தான் பார்க்கப் போகிறோம். 1960 இல் வங்க மொழிப் படம் ஒன்றை தமிழில் எடுக்க இயக்குனர் பீம்சிங் முடிவு செய்கிறார். அப்படத்தை தமிழுக்கேற்ப மாற்றி எழுதும் பொறுப்பை அவர் ஸ்ரீதரிடம் தர, படத்தைப் பார்த்த ஸ்ரீதர், அது தனது ரசனைக்குரியதாக இல்லை என தனது உதவியாளர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு அந்தப் பொறுப்பை பரிந்துரைக்கிறhர். பீம்சிங்கும் சம்மதிக்க, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுத்தில் உருவானதுதான் படிக்காத மேதை. இதன் பெயரில் ஒரு பகுதியை எடுத்து தனது 1985 ஆம் ஆண்டு படத்துக்கு படிக்காத பண்ணையார் என்று பெயர் வைத்தார். அப்படியானால் கதை...?