
ராஞ்சியில் உள்ள தனது பண்ணை நிலத்தில், ட்ராக்டரை இயக்கி தோனி விவசாயியாக மாறினார். இதுதொடர்பாக அவர் 2 ஆண்டுகளுக்கு பின்னர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்படுகிறார். சமூக வலைதளங்களில் தோனி இருந்தாலும், அதில் அடிக்கடி வீடியோ மற்றும் ஃபோட்டோக்களை பதிவு செய்வது கிடையாது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னதாக 2021 ஜனவரி 8 ஆம் தேதி தோனி ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். இதன்பின்னர் எந்த பதிவும் அதில் இல்லாத நிலையில், இன்று மாலை வீடியோ ஒன்றை தோனி வெளியிட்டுள்ளார். இந்த சிறிய வீடியோவில் ட்ராக்டரை தோனி ஓட்டுவதுபோலும், அதனால் நிலத்தை உழுவது போன்றதுமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.