
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற வேண்டும் என்றால், கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இந்த இளம் வீரர்தான் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களத்தில் இறங்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். அவர் தெரிவித்துளள கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி நாளை மறுதினம் நாக்பூரில் தொடங்குகிறது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவுடன் துணை கேப்டன் கே.எல். ராகுல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர் குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது- தொடக்க வீரர்கள் ஏற்படுத்தும் பார்ட்னர்ஷிப் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் முக்கியமானது. அவர்கள்தான் ஆட்டத்தின் போக்கை பெரும்பாலும் தீர்மானிக்கிறார்கள். என்னை பொருத்தளவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவும் – சுப்மன் கில்லும் விளையாட வேண்டும். இந்திய அணி தொடரை கைப்பற்ற வேண்டும் என்றால், இந்த இணை ஓபனிங் இறங்க வேண்டும்.